Wednesday, July 27, 2011

காத்திருக்கும் தீர்ப்பு....!

காத்திருக்கும் தீர்ப்பு...                

              தமிழகத்தின் ஒவ்வொரு தமிழனும் வாதிடும் சூடான சமாச்சாரம் சமச்சீர் கல்வி. சமச்சீர் கல்வியைப் பற்றி பல்வேறு தரப்பினர் சார்பாகவும்,எதிராகவும் அலசி ஆராய்ந்த பிறகு அதனை பற்றி எழுதி கட்டுரையின் பாதையை மாற்ற விரும்பவில்லை, ஆனால் தமிழகத்தில் இன்றைய நிலையில் பாதிக்கப்படும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன அவற்றை பற்றி விளக்குவதே கட்டுரையின் நோக்கம்.

 
1. சமச்சீர் கல்வி:
               இன்றைய சமச்சீர் கல்வி விசாரணையில் உச்சநீதி மன்ற நீதிபதி கேட்ட கேள்வி:
 "எப்போது சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும்? காலக்கெடு ஏதாவது உள்ளதா? " 

தமிழக அரசு நீதிபதியின் பதில்:

"2012-ம் கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த முயற்சி செய்யப்படும்"

                     ஆக 2012 லும் முயற்ச்சி செய்யப்படும் உறுதி கிடையாது. இவ்வளவு முட்டுக்கட்டை சமச்சீர் கல்விக்கு ஏன்? ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறீர்கள் இந்த விசயத்தில்.

எங்களுக்கு சில கேள்விகள் மனதில் எழுகின்றன.

* நீதிமன்றங்கள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த ஆணையிடுகின்றனவே அவை எதையும் ஆராயாமலா சொல்கிறார்கள்?. நீதிமன்றம் மாறுதல் செய்து கொள்ளலாம் என்று சொன்ன பிறகும் சரியில்லை... சரியில்லை... என்று பிடிவாதம் பிடிக்கும் நோக்கம் என்ன?

* இத்தனை பேர் சேர்ந்து(இந்திய தொழில் நுட்ப கழக பேராசிரியர்கள் உட்பட) உருவாக்கிய பாட திட்டம் தவறு என்றால் நீங்கள் உருவாக்கும் குழு மட்டும் எப்படி அறிவாளிகளாக இருந்து விட முடியும்?

* ஒரு புத்தகம் முழுக்க ஒரு சார்பாக இருக்க முடியாது , சார்பான பக்கங்களை ம‌ட்டும் வெட்டி எடுத்து விடுவதில் என்ன சிரமம் இருக்க போகிறது?

* நீங்கள் உருவாக்கும் குழு உங்கள் துதி பாடி சமச்சீர் புத்தகத்தை மாற்றவேண்டும் என்று எண்ணுகிறீர்களா ? இல்லை தனியார் பள்ளிகளை திருப்தி படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா?(நீங்கள் உருவாகிய சமச்சீர் கல்வி ஆய்வு குழுவை ஆராயும் போது மேற்குறிப்பிட்ட இரண்டும் உண்மை போல்தான் தோன்றும்)

* இன்றைய நிலையில் மாணவர்களை இப்படி வதைப்பது தகுமா? இவர்கள்தான் அடுத்த தேர்தலில் ஓட்டு போடும் நிலைக்கு வருபவர்கள் அன்று இவற்றை நினைத்து பார்க்க மாட்டார்களா?.

* கடைசியாக எப்பொழுதுதான் சமச்சீர் கல்வியை அமுல்படுத்துவீர்கள்? . சமச்சீர் கல்வி வருமா? வராதா?

2. விலைவாசி உயர்வு:  



               கடந்த ஆட்சியில் விலைவாசி உயர்வு தலை விரித்தாடியது என்றுதான் ஆட்சி மாற்றம் விரும்பினோம்.அதன் படியே ஆட்சி மாறியது விலைவாசி குறைந்ததா? இல்லையே...
 
          மத்திய அரசு வாகன எரி பொருட்களுக்கு விலை உயர்த்தியபோது தமிழக அரசு வரியை குறைத்து மக்கள் மனதில் கொஞ்சம் சந்தோசத்தை தந்தீர்கள்,ஆனால் அடுத்த இரண்டு வாரங்களிலேயே அனைத்திலும் வரியை உயர்த்தி சாபத்தை வாங்கி கொண்டீர்களே இது என்ன சாமர்த்தியம்?

                  மத்திய அரசு விலை உயர்த்திய போது கூப்பாடு போடும் நீங்கள், இங்கு வரிகளை உயர்த்தி கொள்வது எந்த விதத்தில் நியாயம் ? இதற்க்கு மட்டும் எப்படி மற்ற மாநிலங்களை காரணம் சொல்கிறீர்கள்.அடித்தட்டு மக்கள் அன்றாடம் படும் அவலம் உங்களுக்கு தெரிய வில்லையா?விலை ஏற்றுவதற்க்குத்தான் உங்களை ஆட்சியில் அமர்த்தினோமா?.கடந்த ஆட்சியில் 1 ரூபாய்க்கு அரிசி தந்து மற்றவை விலை அதிகமாயிருந்தது , இப்பொழுது இலவசமாக அரிசி தந்திருக்கிறீர்கள் மற்றவை அப்படியேதான் இருக்கிறது அல்லது அதிகரித்திருக்கிறது அவ்வளவுதான் வித்தியாசம்.என்ன மாற்றம் கொண்டு வந்திருக்கிறீர்கள்,3 மாதத்திற்குள் எப்படி முடியும் என்று கேட்பவர்களுக்கு... 3 மாதத்திற்க்குள் பழைய அரசின் திட்டங்களை இவ்வளவு எதிர்க்க முனைந்த நேரங்களை இதில் கொஞ்சம் செலவிட்டிருக்கலாமே...

3. மின்சார பிரச்சனை:



சமீபத்தில் என் அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்தி:

 தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை  

2007 - 86
2008 - 75
2009  - 15
2010 - 5
2011 - ௦௦௦௦௦0

  - ‍‍கொய்யால மின்சாரம் இருந்தாதானடா சாவீங்க... 
                                 இது நகைச்சுவைக்காக அனுப்படிருந்தாலும் அதில் உள்ள செய்தியை நம்மால் மறுக்க இயலாது.சமீபகாலமாக எப்பொழுது மின்சாரம் போகிறது எப்பொழுது மின்சாரம் வருகிறது என்றே தெரியவில்லை.கடந்த ஆட்சியிலாவது அறிவித்து விட்டு மிசாரத்தை தடை செய்வார்கள் ஆனால் இப்பொழுதெல்லாம் எப்பொழுது மின்சாரம் தடைசெய்வார்கள் எவ்வளவு நேரம் மின்சாரம் போகும் என்பதே தெரியவில்லை.(தூக்கம் கெட்டு கண்விழித்த போது யோசித்தவைதான் இவையெல்லாம்). மின்சார உற்பத்திக்காக சில நடவடிக்கைகளில் அரசு இறங்கியிருப்பதை பாராட்டலாம் அனால் அவர்கள் செய்த அதே தவற்றை செய்வதன் மூலம் வெறுப்பை சம்பாதிக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். 


4. பேருந்து கட்டணம் மற்றும் அரசு மதுபான வியாபாரம்:





                  போன ஆட்சியில் கலர் கலராய் பேருந்து இயக்கி மக்களை வாட்டி வதைக்கிறார்கள் என்று கூறித்தான் ஓட்டு கேட்டு வந்தீர்கள்.நீங்கள் அதையே பின்பற்றுவது என்ன நியாயம் ? மக்கள் எப்படி போனாலும் பரவயில்லை வருமானம் வந்தால் போதுமா?.போன ஆட்சியில் காது கிழிய கத்திய கூட்டனி கட்சிகள் எங்கே? என்ன செய்கிறார்கள் எதிர்கட்சியினர்?.சொகுசு பேருந்து என்ற பெயரில் ஏன் இவ்வளவு கட்டணகொள்ளை. சாதரன பேருந்துகளுக்கும் சொகுசு பேருந்துகளுக்கும் இடையே என்ன வித்தியாசம் வைத்திருக்கிறீர்கள் (தானியங்கி கதவு தவிற).எதற்க்காக போக்குவரத்து மிகுந்த காலை,மாலை நேரங்களில் சொகுசு பேருந்து மட்டுமே இயக்குகிறீர்கள். குறைந்த பட்சம் சாதரன பெருந்துகளை மட்டும் அதிகரிப்பதற்க்கும் ,வேலை நேரங்களில் சொகுசு பேருந்துகளை மட்டும் இயக்கும் பழக்கத்தினை மாற்றி சாதாரன பேருந்துகளையும் இயக்க ஆவன செய்யுமா இந்த‌ அரசு?.

                          நீங்கள் உருவாக்கிய வருமான கூடம் அரசு மதுபான வியாபாரம், நன்றாக பயன்படுத்தியவர்கள் போன ஆட்சியாளர்கள். ஆனால் அதில் வேலை செய்யும் படித்த இளைஞர் கூட்டம் என்ன பாவம் செய்தார்கள்,அவர்களின் பணி என்று நிரந்தரம் செய்யப்படும்,இதை நம்பி வேறு வேலையில்லாமல் இருக்கும் அவர்களுக்கு என்ன செய்தி சொல்லபோகிறீர்கள்?

5. ஈழம் மற்றும் கச்சதீவு பிரச்சனைகள்:


                  இந்த இரண்டு விசயத்திலும் நீங்கள் எடுத்த முடிவுகளை மனதார பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இத்தோடு நின்று விடாமல் மெலும் பல அழுத்தங்களை சர்வதேச நாடுகளுக்கும், மத்திய அரசுக்கும் கொடுக்க வேண்டுகிறோம். கச்ச தீவை பெறவேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்து ஒரு போதும் பின்வாங்காதீர்கள்
                      இலங்கை பொருள்களுக்கு தடை விதித்துள்ளது உண்மையில் அமலில் உள்ளதா? எனக்கு தெரிந்த சில இடங்களில் இலங்கை தயாரிப்புகள் விற்பனை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். உதாரணமாக இந்திய தொழில்நுட்ப கழக வளாகம்(ஐ.ஐ.டி) போன்றவற்றில் தாராளமாக இலங்கை தயாரிப்புகள் கிடைக்கின்றன. எனக்கு தெரிந்த நண்பர்களிடமும் எடுத்து கூறி அவற்றை வாங்காமல் தவிர்க்கிறோம் மற்றவர்களை எப்படி தடுப்பது?. எப்படி இவற்றை கண்காணிக்க போகிறீர்கள், பெயரளவில் மட்டும் தீர்மானம் கொண்டு வருவது தேவை இல்லாதது அவற்றை எப்படி செயல் படுத்த போகிறோம்.


6. போக்குவரத்து நெரிசல்:

                         சென்னையின் இருக்கும் பெரிய பிரச்சனை போக்குவரத்து பிரச்சனை. நடந்து போய்விடலாம் என்று என்னும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டம் முடிவடைந்தால் இதற்க்கான பிரச்சனை ஓரளவு முடியும் என நினைத்திருந்த மக்களின் நம்பிக்கையில் ஒரு கல் எறிந்து விட்டீர்கள். மெட்ரோ ரயிலுக்கு பதிலாக மோனொ ரயில் இயக்கப்படும் என்று அறிவித்திருக்கிறீர்கள். அந்த திட்டம் எவ்வளவு காலம் இழுக்கும் இன்னும் எவ்வளவு காலங்கள் நாங்கள் இந்த போக்குவரத்து பிரச்சனையை சமாளிப்பது. இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை என்ன செய்ய போகிறீர்கள்? அந்த திட்டம் முடிந்து அதற்கான தடுப்புகளை என்று எடுபீர்களோ அன்றுதான் கொஞ்சமாவது போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வுகாண‌ முடியும். இந்த திட்டங்களுக்கு ஒரு தீர்வு காண முன்வருமா அரசு? 

7. நில அபகரிப்பு பிரச்சனை :

                  இது கண்டிப்பாக வரவேற்க பட வேண்டிய ஒன்று.ஆனால் இதிலும் சில திருத்தங்கள் வேண்டும் பலிவாங்கும் நோக்கோடு ஒரு சாராரை மட்டும் கைது செய்வது தவிர்க்க படவேண்டும். தவறு யார் செய்திருந்தாலும் அது ஆளுங்கட்சி, முன்னால் ஆண்ட கட்சி என்ற பேதமின்றி நடவடிக்கைகள் வேண்டும். நிறைய அரசியல்வாதிகள் தான் ஒரு கட்சி, தன் மகன் ஒரு கட்சி, தன் மைத்துனர் ஒரு கட்சி என குடும்பங்கள் அனைத்தும் அனைத்து கட்சிகளிடமும் தொடர்புகளை வைத்துள்ளனர். இவர்கள் செய்யும் ஏமாற்று வேலைகளையும் கண்டு பிடித்து கட்சி பாகுபாடின்றி செயல் படவேண்டும். ஏழை மக்களின் ரத்தங்களை உறிஞ்சியவர்களை சட்டதின் முன் சரியான தண்டனை பெற்று கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் இதை சாதகமாக பயன்படுத்திகொண்டு பலிவாங்கும் நோக்கோடு செயல்படும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் வேண்டும், இல்லையென்றால் இந்த நடவடிக்கைகள் பலிவாங்கும் நடவடிக்கையாகவே மாறிப்போகும்.      
                                  
                         இவ்வளவு முக்கிய பிரச்சனைகளையும் இன்னும் பல பிரச்சனைகளையும் ஆராய்ந்து மக்களை முன்வைத்து தீர்த்து வைத்தால் தான் நம்பிக்கையுடன் ஓட்டு போட்ட மக்களுக்கு இந்த அரசின் மீது நம்பிக்கை வரும். முந்தைய அரசு செயல்படுத்தியது என்ற ஒன்றிற்காக எல்லா திட்டங்களையும் குழிதோண்டி புதைக்க நினைத்தாலோ, மக்கள் துன்பம் அனுபவிக்கும் செயல்களில் இறங்கினாலோ பாதிப்பு உங்களுக்குதான் ஏனென்றால் மக்கள் இப்பொழுது புத்திசாலிகள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன ஒன்று அவர்கள் அடுத்த தீர்ப்பு சொல்வதற்க்கு நான்கு வருடங்கள் ஆகும்.

No comments: