Saturday, January 19, 2013

உழவின்றி உலகில்லை...


கொட்டும் பனியில்
வெம்பும் பிஞ்சுகள்
கோடை மழையில்
குடைசாயும் வேர்கள்
கொளுத்தும் வெயிலில்
கருகும் தழைகள்

தண்டையும் மொட்டையும்
தனதாக்கி கொள்ளும் பூச்சிகள்
கிழங்குளையும் காய்களையும்
கிழித்து போடும் விலங்குகள்
ஒன்று சேரும் தாணியத்தை
உருக்குழைக்கும் பறவைகள்

இப்படி
சகலத்தையும் தாண்டித்தான்
சந்தைக்கு வருகிறது பொருள்கள்
அடிமட்ட விலையில் அள்ளி
இடையில் கடையில் விலைவைத்து
எல்லோரும் இன்பமுற‌
வராதாதை நினைத்து வருந்தாமல்
வயல் தேடித்தான் போகிறது கால்கள்...

சரிதான்
உழவின்றி உலகில்லை ‍
உழவனுக்குதான் ஒன்றும் இல்லை...!

நன்றி:எழுத்து இணையம்( கவிதை போட்டிகாக எழுதியது.)

Friday, January 18, 2013

தைமகளே வருக...

குளித்து வந்த கொண்டை நீர்
கூடமெங்கும் கோலமிட
தை மகளை வரவேற்க‌
தயாரானோம் தமிழ் மகளாய்

குத்தி எடுத்த முதல் அரிசி
குமிழ் சிரிப்புடன் காத்திருக்க‌
நெற்றி பொட்டாய் சூரியன் வந்து
நீண்ட வெளிச்சம் தந்தான்

கேரளத்து சந்தனத்தில்
கிளைவிட்ட அருகு சொருகி
பொங்கள் தழை பறித்து
பிள்ளையார்க்கு முன் வைத்தோம்

உழுத‌ திசை பார்த்து
ஒற்றை வகிடு அடுப்பு செய்து
பனை ஓலை எடுத்து
பத்திரமாய் பற்றவைதோம்

அளவு நீர் வைத்து
அடிகரும்பு வெல்லம் இட்டு
கொதித்த பானை நோக்கி
கொலவை செய்து வரவேற்றோம்

தித்திக்கும் பொங்கள்.. தேன்சுவை கரும்பு..
வானம்பார்த்த பனங்கிழங்கு.. வயல்விட்டு வந்த மஞ்சள்..

எல்லாவற்றையும் அர்பணிக்கிறோம்
இன்பம் கொடு தை மகளே...! 

நன்றி: எழுத்து இணையம்