Thursday, August 25, 2011

நேற்று முளைத்த காளானும்... பழைய பூதங்களும் ...

                 அன்னா ஹாசரே மெற்கொள்ளும் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்க்கு இவ்வளவு ஆதரவை கண்டு உண்மையில் இது இந்தியாதானா எனும் அளவுக்கு ஆச்சர்யம் எழுகின்றது , நாம் சாரசரி வாழ்க்கையில் ஊழல் இல்லாத இடமே இல்லை... பழகிப்போன, கறைபடிந்த, அர்த்தமில்லாத,தேசத்தின் துரோகமான‌ ஊழலை எதிர்ப்பது என்பது சாதாரன விசயமில்லை,அதற்கு பெருகி வரும் ஆதரவுகள் நிச்சயம் பாராட்டக்கூடிய விசயம்தாம்.

                  எல்லாம் சரிதான் இவ்வளவு நாளாய் எங்கே போனாய் என் தேசமே? வேறு எவறுமே போராடவில்லையா? இல்லை போராடியவர்கள் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ? போராடியவர்களை இந்த ஊடகம் சரியாக உங்களுக்கு அடையாளபடுத்த வில்லையா? இல்லை எல்லோரும் ஆதரவு தருகிறார்கள் நாமும் கலந்து கொள்வோம் என்று சொல்கிறீர்களா? இல்லை மட்டைபந்தில் சொதப்பிய இந்திய அணியை பார்த்த வெறுப்பில் வந்த கூட்டமா, நாளைக்கே இந்தியாவை கடனாளியாக்கி விட்டு இரண்டொரு வெற்றிகளை குவித்து விட்டால் தொலைக்காட்சி முன் அமர்ந்து தவமிருக்க‌ போய்விடுவீர்களா?.
 

        தனியார் முதலாளிகளின் ஊழலுக்கும்,அரசு ஊழியர்களின் ஊழலுக்கும் எதிராய் கிளர்தெழுந்தவர்களை நக்சல்கள் என்று கூறி அடக்குகிறோம்.அவர்களின் போராட்ட பாதை தவறு என ஏற்றுக்கொள்ளும் அதே தருணத்தில், அவர்களின் போராட்ட காரணத்திற்கு என்ன பதில் சொன்னோம். இயற்கை வளங்களை அபகரிக்கும் தனியார் முதலாளிகளை ஆதரிக்கிறோம் என்ற பெயரில் ஊழலுக்கு ஆதரவு தரும் அரசையும் நம்மையும் என்னவென்று சொல்வது(இதைதானே அருந்ததி ராயும் வழியுறுத்தி சொல்கிறார்).இதைப்போன்ற பழைய பூதங்களை நம் கண் முன் மறைக்கப்பட்டது ஏன்?.அவற்றை பற்றி அறிந்து கொள்ள கூட முற்படாத‌ நாம் நேற்று கிளம்பிய ஊழல் போராட்டதிற்கு ஆதரவு தருகிறேன் என்று கிளம்புவதும், இதை வைத்து ஆதாயம் தேட விளையும் புல்லுருவிகளை பாராட்டுவதையும் நினைத்தால் நகைச்சுவைதான் வருகின்றது.

        இவ்வளவு ஏன்? அன்னா ஹசாரே போராட்டம் நடத்தும் இதே நேரத்தில் இன்னொரு முக்கிய போராட்டமும் நடைபெறுகின்றது அதுவும் பாராளுமன்ற வாசலிலேயே நடக்கிறது, அதுவும் நம் வாழ்க்கை சம்பந்தபட்ட ஒன்றுதான் எத்தனை பேருக்கு அந்த போராட்டம் தெரியும்? எத்தனை பேர் அதற்கு ஆதரவு கொடுத்து கொண்டிருக்கிறார்கள்? அதுவும் இன்றியமையாத உணவு பொருள் மரபனு கலப்பினத்திற்கு எதிராக‌ பசுமைபுரட்சி(கிரீன்பீஸ்) அமைப்பினர் செய்யும் ஆர்பாட்டம். இந்த "இந்திய உயிரி‍தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம்" மசோதாவும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதை அனுமதித்தால், வளரும் சந்ததிக்கு நம் கையினாலேயெ பூச்சிக்கொள்ளியை உணவு என்னும் பெயரில் கொடுக்க நேரிடலாம், மேலும் மரபனு பற்றி தவறாக மக்களிடத்தில் சொன்னாலே சிறை தண்டனையாம். என்ன ஒரு கொடுமை , தனியார் மயவாதிகளும் ,அரசியல் வாதிகளும் இணைந்து செயல்படுத்த போகும் இப்படி பட்ட‌ ஒரு மசோதாவும்தான் இருக்கிறது.இதை பற்றி என்ன சொல்ல போகிறோம்? இதற்கு ஏன் மக்கள் யாரும் திரளவில்லை?


            ஊழல் எதிர்ப்பு முறையாக அமல்படுத்தப்பட்டு நல்ல காரியங்கள் நடக்கும் என்றால் அது நல்லது.இந்த போராட்டம் "லொக்பால்" வரம்புக்குள் பிரதமரும் வரவேண்டும் என்றும் உடனே அமல்படுத்த வேண்டும் என்று தொடர்கிறது.அப்படி நடைமுறைபடுத்திய பின் எல்லாம் சரியாக நடக்குமா? அதற்கு என்ன உத்திரவாதம் தரமுடியும்.இதை ஆதரிக்கும் எதிர்கட்சிகளும் நாளை ஆட்சிக்கு வந்தால் மாறக்கூடும்,இன்னும் சொல்லப் போனால் எதிர்கட்சிகளின் அரசியலுக்கு அன்னா பலியகிறாரோ என்ற எண்ணம் கூட வருகின்றது.இன்று ஊழலுக்கு எதிராக கொடி பிடிக்கும் நாம் சாதீயம் குறித்தோ, ஏழ்மை நிலைக்கு எதிராகவோ போராடும் போது அவரவர் வேலை பார்த்து கொண்டுதானே செல்கிறோம்.சுதந்திரம் வாங்கியதில் இருந்து துயரப்படும் அடித்தட்டு மக்களுக்கு எவரும் போராட முன் வருவதில்லையே அல்லது அப்படி வருவோரை மட்டம் தட்டுவதிலேதானே நாம் காலத்தை கழித்திருக்கிறோம். இது குறித்து எப்போதாவது நாம் சிந்தித்திருக்கிறோமா? இல்லை சிலர் போல் "அதற்கெல்லாம் போராட ஆள் இருக்கிறார்கள்" என்று சொல்ல வருகிறோமா? இல்லை "நான் செய்யலாம் என்று இருந்தேன் அவர்கள் செய்கிறார்கள்,நான் எப்படி அவர்களுக்கு ஆதரவு தரமுடியும்" என்று சொல்ல வருகிறோமா? (இப்படி சொன்னவர்கள் எல்லாம் இன்று ஊழல் எதிப்பு போருக்கு ஆதரவு தருகிறார்களாம்!?). இவையெல்லாம் மாறி என்று நாம் ஒரே சிந்தனையில் உருப்பெற போகிறோம்? தமிழர்கள் நாம் ஒன்றினைந்து நினைத்திருந்தால் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஏன் உலகையும் கூட இலங்கை விசயத்தை புரிதல் செய்திருக்க முடியும் ஆனால் நம் போராட்ட களங்களை தனியாக பிரித்து, நமக்குள் தனிதனியாய் பிரிந்து நம் சொந்தங்களை இழந்து பழி சொல்லுக்கு இன்று ஆளாகி இருக்கிறோம். இவையெல்லாம் நம் கண்ணில் தெரியாமல் மறைத்த‌ புண்ணியத்தை யார் செய்தது? அப்போதெல்லாம் எங்கே போயிருந்தது இத்தனை பெரும் இந்தியா?  
    
                                           ஊழல் விசயத்தில் நான் கொடுக்கமாட்டேன், வாங்கமாட்டேன் என்ற இரண்டு விதிகள்தான் ஆனால் சராசரி பதில் என்ன வரும்?, "நடைமுறை வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியம் ஆகாது".இந்த பதில் எல்லாம் அர்த்தமில்லாத ஒன்று,சாத்தியம் என்று வருகிறதோ அன்று சிறிய அளவிலும் சரி,பெரிய அளவிலும் சரி ஊழல் இருக்காது.இதே அரசு "லோக்பால்" மசோதா நிறைவேற்றினாலும் ஊழலை மறைக்க முடியாது காரணம் மனிதர்களிடம் பணம் சேர்க்கும் ஆசையும்,வெறியும் புரையோடிபோய் கிடக்கின்றது.நேர்வழியில் சம்பாதிக்க எவரும் விரும்பாத நிலை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.நாம் அரசியல்வாதிகளையும்,அரசு அலுவலர்களையும்,தனியார் முதலாளிகளையும் குறைசொல்லி ஒன்றும் பயனில்லை, நாமும் மாறவேண்டும் அதுதான் ஊழலை ஒழிக்க நிரந்தர வழி.ஒவ்வொரு மனிதனும் மனிதனாய்,இந்தியனாய் நினைத்தால் அது முடியும். போராட்டம் என்பது மனித‌ சக்தியை திரட்டும் பெரும் யுக்தி, யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக உங்களை இணைத்துக் கொள்ளாமல் சுயமாக சிந்தனை செய்து போராடுங்கள்.நேர்மையான நல்ல காரியங்கள் நடக்கவேண்டும் என்பதற்காய் போராடுங்கள். மனிதன் மனிதனாய் வாழ்வதற்கு போராடுங்கள்.

        இந்தியா நிறைய இடங்களில் முன்னேற வேண்டியதிருக்கிறது சாதீயம்,மதம்,ஏழ்மை,தீவிரவாதம்,ஊழல் மற்றும் இன்னும் பற்பல.இவை எல்லாம் முற்றிலும் மாற வேண்டுமானால் மனிதர்கள் நாம் மாறவேண்டும் அதுதான் இந்தியா ஒளிர்வதற்க்கு விளக்காகுமே தவிற இது போன்று ஒருவர் பின்னே ஓடிவரும் செம்மறி ஆடுகளாய் இருப்பது நமக்கு அவசியமே இல்லாத ஒன்று.எதற்காக போராடுகிறோம் என்று அறிந்து பின்தொடர்வோம், போராடுவோம். ஒவ்வொரு இந்தியனும் நினைத்தால் சாதீயம், மதம்,ஏழ்மை, தீவிரவாதம், ஊழல் எதுவுமே இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும்.ஆம் நாம் நினைத்தால்தான் அது முடியும்.
       

Monday, August 8, 2011

காதல் பக்கம் ‍ - 1