Thursday, November 24, 2011

ஒரு பயணத்தின் கதை...

அவசர பயண முடிவுகளில்
பெரும்பாலும்
இரயில் பயணம் சாத்தியமில்லை... 

உடல் கிழிக்கா இருக்கை வேண்டும்
உடனே திறக்கும் கண்ணாடியோடு
உலுக்கி எடுகாத பேருந்து‌‌ வேண்டும்...


உணவு தண்ணீர் எடுத்து
உணர்வோடு வைக்க வேண்டும்
இல்லையெனில்
உணவகங்களுக்கு ஒரு நூறு
அழுதாக வேண்டும்...

சிரித்த முகத்துடனே நடத்துனர்

சில்லரை தரவேண்டும்
சேரும் நேரம் கேட்டால்
சீராத ஓட்டுனர் வேண்டும்

ஏழையாய் இருந்தாலும்

இவையோடு சேர்ந்து இப்பொழுது
இருமடங்கு கட்டணமும் வேண்டும்...

அத்தனை இடர்படுகளும்

அர்த்தமற்றதாகி போகின்றன‌
அன்பு நிறைந்த
உறவுகளை பார்க்கும்போது...

மீண்டும் அதே பயணம்

மாறாத அதே அழுத்தங்கள்
இருந்தும் தயாரகிறோம்
அடுத்த பயணத்தை நோக்கி
சொந்த ஊரின் சுகத்தை அனுபவிக்க....!

Friday, November 18, 2011

மக்கள் போ(தூ)ற்றும் அரசு....!



           மக்கள் அரசு என்பது மக்களை அரவணைப்பதாகவும் , அவர்களுக்கு வழிகாட்டுதலாகவும் மற்றும் முன்னோடியாக போற்றுதலுக்கு உரியதாகவும் இருக்க வேண்டும்.

"நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி,சிவசக்தி!-என்னை
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே? "
                       -- பாரதியார்

நல்ல ஒரு காரியம் செய்து அதை குப்பையில் போடுவதற்காகவா மனிதனை அறிவுடன் படைக்கப்பட்டான். நல்ல காரியம் செய்யாவிட்டாலும் பரவயில்லை பிறர் செய்த நல்ல காரியங்களை குப்பையில் போடுவது என்பது மிகபெரிய மனித துரோகம். முற்காலத்தில் போரிட்டு நாடுகளை கைப்பற்றும் போது கூட அந்தந்த நாடுகளில் உள்ள அறிவு சார்ந்த விசயங்களை ஒரு பொழுதும் அழிக்க முற்பட்டதில்லை ஆனால் தற்பொழுது நடக்கும் நிகழ்ச்சிகளை பொறுத்தி பார்க்கும் போது நாம் பெற்ற வளர்ச்சியெல்லாம் ஒன்றுக்கும் உதவ போவதில்லை என்பது மட்டும் திண்ணமாகின்றது.

அண்ணா நூற்றாண்டு நூலகம் மாற்றம் என்ற அறிவிப்பு வாசிக்கும் பழக்கமுடைய அனைவருக்கும் பெருத்த அதிர்ச்சி. ஒரு நூலகத்திற்கென்றே வடிவமைப்புகளுடன் கட்டபட்ட கட்டிடத்தை மருத்துவமனையாக்குவது என்பதும் வீண்செலவான விசயம்.அப்படி மாற்றும் செலவினங்களோடு கூடுதலாக நிதி சேர்த்து புதியதாக ஒரு மருத்துவமனையையே கட்டிவிடலாம் அப்படி இருக்க நூலகத்தை இடமாற்றம் செய்வது என்பது ஏன் என்பதுதான் புரியவில்லை. நூலகங்களின் எண்ணிக்கை உயர்வது நிச்சயம் நல்ல விசயம்தான், ஆட்சியாளர்கள் அதனை வேறொரு இடத்திற்கு மாற்றம் செய்யவேண்டும் என நினைப்பவர்கள் ஏன் ஒரு புதிய நூலகத்தை கட்டகூடாது?. சென்னை இல்லாது மதுரை,திருச்சி மற்றும் கோவை போன்ற நகரங்களில் நூலகத்தை கட்டுங்கள் யார் உங்களை வரவேற்காமல் இருக்க போகிறார்கள்.அதை விடுத்து காழ்ப்புணர்ச்சியில் செய்யும் செயல்கள் நிச்சயம் ஓட்டு போட்ட மக்களுக்கு செய்யும் ந‌ம்பிக்கை தர்மம் கிடையாது மாறான துரோகம்.

கட்டண‌ உயர்வுகள் :

    எந்த ஒரு சாமனிய மனிதனும் ஏற்றுகொள்ள முடியாத அளவு விலை ஏற்றங்கள் நடந்துள்ளது.நாம் அறிந்த வரையில் பெரும்பாண்மையான மக்களை முகம் சுழிக்க வைக்கும் ஒரு காரியம் இது.ஏற்கனவே விலை உயர்வுகளை சந்திக்க முடியாமல் துண்பங்களில் ஆழ்ந்து கிடக்கும் மக்களுக்கு இது மேலும் பலத்த அடி.பால் விலை உயர்வு 6 ரூபாய்,பேருந்து கட்டணம் 40 ல் இருந்து 60 சதவிகிதம் உயர்வு எண்பது சதாரண மக்களை நேரடியாக பாதிக்க கூடிய விசயங்கள்.இந்த விலை உயர்வுக்கு எடுத்து சொல்லும் காரணங்களும் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று.

1.மத்திய அரசின் நிதி வரவில்லை: இது எப்படி நம்ப தகுந்ததாக இருக்க முடியும்.எல்லா மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்பட்டு கொடுக்கதானே மத்திய அரசு இருக்கிறது,மற்ற மாநிலங்கள் இதைபற்றி ஒரு குறையும் சொல்லவே இல்லையே.நீங்கள் உங்களது சுய விளம்பரத்திற்காக கொடுக்கும் இலவசங்களுக்கு நிதிஉதவி கேட்டால் எப்படி மத்திய அரசு கொடுக்கும்,இதை நீங்கள் இலவசங்களை அறிவிப்பதற்க்கு முன்னால் அல்லவா யோசித்திருக்க வேண்டும்.அப்ப‌டியே மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும் அதை வாங்கும் முயற்ச்சி செய்யாமல் மக்களின் தலைமேல் சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்.

2.ஆவின் மற்றும் போக்குவரத்து கழகங்கள் இழப்பில் இயங்குகிறது:
இந்த கழகங்கள் இழப்பில் இயங்குவதற்கு யார் காரணம்? அவை வெற்றிகரமாக இயங்குவதற்கு என்ன முயற்ச்சிகள் எடுத்தீர்கள்?. காரணத்தை அறியாமல் அந்த சுமையை மக்கள் மேல் ஏன் சுமத்துகிறீர்கள்.இந்த விலை உயர்வினால் அந்த நிறுவனங்கள் நல்ல நிலை அடையுமா? பக்கத்தில் உள்ள கர்னாடகத்தில் நீங்கள் தற்போது உயர்த்திய விலையை விட 30 சதவிகிதம் குறைவு ஆனால் அவர்களின் பராமரிப்பிலும் சேவைசெய்யும் விதத்திலும் மிகவும் தரமானவர்களாக இருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது மற்ற மாநிலங்களை கட்டண‌ விசயத்தில் மட்டும் நீங்கள் ஒப்பிடுவது எந்த விதத்தில் நியாயம்.கட்டணங்களை உயர்த்திய நீங்கள் வசதிகளை பெருக்குவதற்கும் ஒழுங்காக சேவை செய்வதற்கும் என்ன உத்திரவாதம் தந்திருக்கிறீர்கள்.


                    இழப்பில் இயங்குகிறது என்பதற்காக இரண்டு நிறுவனத்தையும், அலுவலர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று கதை சொல்லும் நீங்கள் 15,000 கோடி வருமானம் வரும் மதுபான நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களை ஏன் நிரந்தர பணியாளர்களாக மாற்ற மறுக்கிறீர்கள் ,அவர்களின் நியாயமான கோரிக்கைகளை மறுப்பது ஏன்? 13,000 மக்கள் நல பணியாளர்களை எந்த அடிப்படையில் வெளியேற்றினீர்கள்.இழப்பில் இயங்கும் நிறுவனத்திற்க்காக விலையை உயர்த்தும் நீங்கள்,லாபத்துடன் இயங்கும் நிறுவன ஊழியர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்காமல் கூட வதைப்பது எப்படி சரியானதாகும்.ஏன் இந்த பாகுபாடு செய்கிறீர்கள்,எல்லோரையும் ஒரே மாதிரியாகத்தானே பார்த்திருக்க வேண்டும்.பால் கொள்முதல் விலை 2 ரூபாய் அதிகரிப்பு ஆனால் விற்பனை 6 ரூபாய் அதிகரிப்பு.பால் உற்பத்தி செய்யும் மக்களுக்கு எந்த லாபமும் கூடாதாம் ஆனால் மக்கள் மேல் சுமையை ஏற்றி லாபத்தை சம்பாதிக்கலாமாம் இது எந்த வகையில் மக்கள் நலனை சார்ந்ததாக இருக்க முடியும்? .
            சாதாரண , நடுத்தர மக்கள் ஏற்கனவே பல்வேறு வரிச்சுமைகளிலும் நடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கையில் மீண்டுமொரு பெரியொதொரு விலையேற்றம் என்பது ஏற்றுகொள்ளவே முடியாது.இனிமேல் தேனீர்,காப்பி என்பதெல்லாம் திருநாளுக்கு செய்யும் பதார்த்தம் போல் ஆனாலும் ஆச்சர்ய படுவதற்க்கு ஒன்றுமில்லை.இரயில் பயணங்களுக்கு கூட்டம் அதிகபடியாக அலைமோதும் என்பதிலும் மாற்று கருத்து இல்லை. இந்த விலை உயர்வை முன்வைத்து தனியார் பால் நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிறுவனங்கள் தங்கள் விலையை உயர்த்திக்கொள்வது நிச்சயம்,ஆக யோசித்து பார்த்தால் தனியார் நிறுவனக்களின் சதி இங்கு இருக்க கூடும் என்பது பாமரனுக்கும் புரிந்து போய் விடுகின்றது.இதற்கு மேலும் மக்கள் போற்றும் அரசா இல்லையா என்பதை மக்கள்தான் முடிவெடுப்பர்.எது எப்படியோ ஓட்டு போட்ட மக்கள் ஏதோ முனுமுனுப்பது தெரிகிறது.ஆனால் என்ன செய்வது இன்னும் 4 ஆண்டு காலம் தலை எழுத்தை மாற்ற முடியாது என்பது மட்டும் நிச்சயம்.