Tuesday, September 6, 2011

மழை நாளின் மிச்சம்...!

கை வலிக்குமென்றென்னி
காதலோடு குடையை நான் கேட்க‌
வேண்டாமென முறைத்தாய்
வேண்டும் என்றே என்னை
வெட்க மழையில் நனைத்தாய்....

அவயங்கள் பட்டுவிடுமோ என‌
அதீத‌ எச்ச‌ரிக்கையில்
அச்ச‌த்தோடு நான் ந‌ட‌க்க‌...
நீ
நெருங்கி ந‌ட‌ந்து வ‌ந்து
நெருப்பு சுவாச‌த்தால்
நெஞ்ச‌த்தை குலைத்தாய்....

ம‌ழையின் குளிர்
ம‌ன‌திற்க்குள் இருக்க‌
உடலின் குளிரையெல்லாம்
ஓரக்கண்ணால் விரட்டி அடித்தாய்...

மழைநீரை கையில் ஏந்தி
மாறி மாறி என்மேல் எரிந்து
தண்ணீரை கூட கை வைத்து
பண்ணீராக்கி தந்தாய்....

ச‌ல‌ ச‌ல‌த்த‌ கொலுசு ச‌த்த‌ம்
ச‌ட‌ ச‌ட‌வென்ற‌ ம‌ழை நீரில்
ச‌த்த‌ம் ஓய்ந்த‌துபோல்
ப‌ட‌ ப‌ட‌த்த‌ என் ம‌ன‌தினை
ப‌தை ப‌தைத்த‌ உன் விர‌ல் தொட்டு
யுத்த‌ம் நிறுத்தி கடந்தாய்.....

சத்தமில்லாமல் என்மனதில்
சாகசங்கள் பல‌ புரிந்தாய்  - ஓர்நாள்
சந்தியில்நின்று ஏதுமில்லை எனசொல்லி
சாதுர்யமாய் எனை பிரிந்தாய்...

ஆனால் நான்
கொஞ்சம் நேற்று பொழிந்த‌
கோடை சிறு மழைக்கே
கலையாத‌ உன்நினைவுகளில்
களிப்போடு நனைந்து வந்தேன் - இப்படி
மொத்தமாய் கொட்டிதீர்த்த‌ மழைகளில்
மிச்சமாய் நின்றது எனது காதலும்..
உனைப்பற்றிய எனது கவிதைகளும்தான்...!


வெளிவந்த படைப்பு நன்றி :தமிழ்ஆதர்ஸ்.கொம்

Sunday, September 4, 2011

கலங்கி போன சாமி...

அதிகாலை நான்கு மனிக்கு
அக்னி வளர்த்து யாகம்
காலையில் களைகட்டும்
பொங்கல் விழா
மதியம் கருவாட்டு குழம்பு கூழ் ஊற்றி
மகிழ்ச்சி கொண்டாட்டம்
மாலையில் கரகாட்டம் அதில்
மதி மயங்கும் குத்தாட்டம்
இரவில் தேர்ப்பயண வீதிஉலா என‌
இனிமையாக இருந்தது திருவிழா...

நள்ளிரவு ஆடல் பாடலில்
தலைவன் பாடல் போடவில்லை என்ற‌
தடியடி கலவரத்தில்
தப்பித்து ஓடிய கூட்டத்தைப் போலவே
கருவறைக்குள் நடுங்கியபடி
கலங்கிக் கொண்டிருந்தது
எல்லோரையும் காக்கும் சாமி...!

நன்றி : கீற்று