Tuesday, October 13, 2009

பிரிதலும்... புரிதலும்...

பொருளீட்டும் காரணமாய்
பருந்தையொத்த வாகணத்தில் நான்
பயணித்த காலங்களில்...

கல்யாணத்திற்க்கு காத்திருந்த
கனியமுது தங்கைகளும்
பொருள்களை சேர்த்திடாமல்
புண்ணியங்களை சேர்த்திருந்த பெற்றோரும்
புத்தியில் வந்துபோக...
புதுமகவை எதிர்நோக்கி காத்திருந்த
பூ உன் நினைவு நிறுத்தி
நெடுநேரம் நிலைகுத்தி நின்றேன்....

பாசி படர்ந்த ஒற்றை வயலில்
பாதம் பதித்து பழக்கப்பட்ட கால்கள்
பாலைவன மணலை தினம் தொட்டுபார்க்க
சூரியன் உச்சிமீது கனலை கொட்டிதீர்க்க
இப்படியாய்
நெருப்பொத்த தேசத்தில் எனக்கு வேலையாம்
நெஞ்சம் சோர்ந்து போகிறது தினம் கோழையாய்....

அங்கே
வெள்ளையும் கருப்புமாய் மனிதர்கள் - அவர்பிள்ளைக்கு
வேடிக்கை பொம்மையாய் எம்மேல் கொடுமைகள்
எள்ளுக்காய் அளவில் சிறு எறிகணைகள்
கொல்லுதல் இல்லாமல் முழங்கால் குறிபார்க்க
எதிர்த்து நியாயம் கேட்போர் எல்லோருக்கும்
ஏதிலி என்றோர் ஏளனமான பதில்இருக்கும்...

ஏறுபூட்டி உழுத நேரங்களில் அன்பே - உன்னோடு
இன்பமயமாய் கூடி வாழ்ந்து வந்தேன்
தார்கூட்டி எடுக்கும் இந்த தேசத்தில்
தாரகை உன்நினைவில் தவியாய் தவிக்கிறேன்
மாலைநேர சூரியன் மறைந்துஓட - உன்
மந்தகாச புன்னகை நினைவில் மயங்கிஇருக்க
தாணியங்கி இயந்திரமாய் களைப்பில் கண்சரிய
தவிப்பில்வந்த கண்ணீரை தலையணை அறியும்...

ஒலிவாங்கியில் உன்னோடு உலாவிய நேரத்தில்
உதடுஒட்டா முத்தம் ஒன்றை உலுப்பிவிட்டாய்
அது சொல்லிப்போனது
தள்ளிப்போகும் நாளுக்காய் தவிப்பதாய் - எனைவிட்டு
தனியாய் இருப்பதை தினம் வெறுப்பதாய்
அந்திசாய்ந்த விளக்கொளியில் அத்தனையையும் முறைப்பதாய்
அகல்விளக்கினை பார்த்து அர்த்தமற்று சிரிப்பதாய்....

என் கருவரையின் தோழிகளை
மணவறையில் பார்த்து விட்டேன் - காதல்
கண்மனியே வந்துவிட்டேன் கவலைபட்டினி தேயவேண்டாம்
இன்னொருமுறை நான் உன்னை பிரியமாட்டேன்
இந்த தேசத்தை விட்டு போகமாட்டேன்...

நோகாமல்பணம் கிடைக்குமென்று நூறுநாள்வேலை செய்யமாட்டேன்
நிறையபொருள் கிடைக்குமென்று நெடுந்தூரம் பிரியமாட்டேன்
சோம்பேறியாக்கும் கூட்டத்தில் இணையமாட்டேன் - உண்ண
சோறுபோடும் நம்நிலத்தில் உழைக்க தயங்கமாட்டேன்...!

நன்றி தமிழ்மன்றம்.காம்
தமிழ்மன்ற 18 வது கவிதை போட்டியில் இரண்டாம் இடம்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21209