Thursday, July 30, 2009

செவிலித் தாய்...

ஒவ்வொரு மகவும்
உலகம் அறியா அதிசயம்...

கை மடக்கி விரல்சூப்பி
கண்ணயர்ந்த நிலையை பார்க்க‌
கண்கள் நூறு வேண்டும்...

முதல் அழுகை
முதல் புன்னகை
முதல் கோபம்
முதல்களில் எவ்வ‌ளவு ஆன‌ந்தம்...

பசியெடுத்து அழும்போதும்
குஷிவந்து சிரிக்கும்போதும்
கன்னக்குழி வரையும் ஒவிய‌த்தை
கால‌மெல்லாம் மனது ர‌சிக்கும்...

ப‌ஞ்சு போன்ற‌ மென்ப‌குதியில்
ப‌தித்து போடும் ஊசிக்கு
உத‌டு சுழித்து வ‌ரும் அழுகைக்கும்
ஓராயிர‌ம் அர்த்த‌ம் இருக்கும்...

புரியாத‌ போதும் ‍நாம்
அசையும் அசைவுக்கு
பொக்கைவாயால் பூக்கும் புன்ன‌கையில்
பூமிகூட‌ தலையை அசைக்கும்...

சொல்ல அளவில்லா இன்பங்களோடு
இத்தனை குழந்தைகளோடு
இன்பமாய் இருந்த போதும்
இத‌ய‌நோயினால் இழ‌ந்த
என் ஒரே ம‌க‌வை நினைக்கையில்
எதுவுமே இல்லாத‌வ‌ளாகி போகிறேன்..!


நன்றி யூத்ஃபுல் விகடன்: இந்த படைப்பு யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது (27-07-2009
).

No comments: